கோலாலம்பூர், பிப் 18 – பேரங்காடியின் நுழைவாய் பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைக்க வேண்டாமென கூறிய , நேபாள பாதுகாவலரை தாக்கிய 2 ஆடவர்களின் வாக்குமூலத்தை போலீசார் பெற்றுள்ளனர்.
முன்னதாக அதன் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டிருந்தது. அந்த சம்பவம் நேற்று,கோலாலம்பூரில் உள்ள Pandan Capital Mall பேரங்காடியில் நிகழ்ந்ததாக, அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் Farouk Eshak தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைக்க வேண்டாமெனக் கூறியும் , அதைக் கேட்காமல் நிறுத்தி வைத்து சென்ற 30 வயது மதிக்கத்தக்க இரு ஆடவர்களுக்கும் , பின்னர் பணியில் இருந்த நேபாள பாதுகாவலருடன் தகராற்றில் ஈடுபட்டதோடு, அவரைத் தாக்கியும் உள்ளனர்.
பாதிக்கப்பட்ட பாதுகாவலர் கண்ணிலும் மூக்கிலும் ஏற்பட்ட காயத்திற்காக அம்பாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதனிடையே அந்த தகராற்றினைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பேரங்காடியின் நிர்வாகம் போலிசை அழைத்து தகவல் கொடுத்ததாக Farouk Eshak தெரிவித்தார்.