
செப்பாங், பிப் 25 – மாட்சிமை தங்கிய பேரரசர் மற்றும் ஆட்சியாளர்கள் மாநாடு குறித்து சமூக ஊடகங்களில் புண்படுத்தும் இடுகையை பதிவேற்றம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட 67 வயது ஆடவருக்கு இன்று செஷன்ஸ் நீதிமன்றம் 30,000 ரிங்கிட் அபராதம் விதித்தது.
இந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் ஜொஹாரி இஸ்மாயில் ( Johari Ismail ) என்ற அந்த நபர் ஆறு மாத சிறைத் தண்டனையை அனுபவிக்கும்படி நீதிபதி அகமட் புவாட் ஒத்மான்( Ahmad Fuad Othman ) உத்தரவிட்டார்.
மற்றவர்களுக்கு எரிச்சலூட்டும் நோக்கத்துடன் தெரிந்தே முகநூலை பயன்படுத்தியதாக ஜொஹாரி மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
பிப்ரவரி 9 ஆம் தேதி மதியம் 12.59 மணியளவில் சைபர்ஜெயாவின் ஜாலான் இம்பாக்ட் (Jalan Impact) டவர் 1 இல் (Tower 1) உள்ள மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் அலுவலகத்தில் இந்த இணைப்பு கண்டுப்பிடிக்கப்பட்டது.
1998 ஆம் ஆண்டின் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் பிரிவு 233 (1) (a) யின் கீழ் ஜொஹாரி மீது குற்றஞ்சாட்டப்பட்டது.