
குவாலா நெரூஸ், ஜனவரி-14, பேரலை மற்றும் நீர்பெருக்கு ஏற்படுவதைக் காணும் ஆர்வத்தில் கடற்கரைக்குப் படையெடுக்கும் பொதுமக்களின் செயல் ஆபத்தில் முடியலாம்.
திரங்கானு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அந்த நினைவூட்டலை வழங்கியுள்ளது.
பேரலைகள் எழும்பும் போதும் நீர் பெருக்கு ஏற்படும் போதும் கடற்கரைகளில் ஓய்வெடுப்பதோ, செல்ஃபி எடுப்பதோ அல்லது சமூக ஊடகங்களில் நேரலை செய்வதோ கூடாது என அத்துறையின் தலைவர் அஸ்மி ஓமார் சொன்னார்.
திரங்கானு கரையோரங்களில் பெரிய அலைகள் எழும்புவதும் பலத்த காற்று வீசுவதும் வருகையாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையலாம்.
குறிப்பாக மயாமி கடற்கரை என்ற பட்டப் பெயரைக் கொண்ட பந்தாய் செபராங் தாக்கிர் கடற்கரையை அவர் சுட்டிக் காட்டினார்.
இந்நிலையில், குவாலா நெரூஸ் மாவட்டத்தில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீயணைப்புத் துறை ரோந்துப் பணிகளை அதிகரித்துள்ளது.
தெலுக் கெத்தாப்பாங் கடற்கரையிலிருந்து ஜம்பாத்தான் அங்காட் பால் வரையிலான பாதை, பாதுகாப்புக் கருதி அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளது.
பெரிய அலைகள் எழும்புவதை டிக் டோக்கில் நேரலை செய்வதற்காகவே ஏராளமானோர் கடற்கரையில் குவிகின்றனர்; அத்தகைய 10 நேரலைகளை தாமே டிக் டோக்கில் பார்த்ததாக அஸ்மி சொன்னார்.
எனினும், அறிவுரை கூறப்பட்டதும் அவர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
பாதுகாப்பை முன்னிறுத்தி அசம்பாவிதங்களைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டுமென்றார் அவர்.