
மஞ்சோங், நவம்பர் 21 – பேராக், மஞ்சோங், பாடாங் பெர்தானியான் லெக்யூ திடலில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காற்பந்தாட்டத்தின் போது, நடுவரை தாக்கி காயப்படுத்தியதாக நம்பப்படும் மூன்று விளையாட்டாளர்களை போலீஸ் விசாரணைக்காக அழைக்கும்.
அம்மூவரும், செத்யூ மாவட்ட மன்றத்தின் சார்பில் களமிறங்கிய விளையாட்டாளர்கள் என நம்பப்படுகிறது.
தாம் தாக்கப்பட்டதாக, சம்பந்தப்பட்ட நடுவர் நேற்று மாலை மணி 7.26 வாக்கில் செய்த போலீஸ் புகாரை தொடர்ந்து, அவர்கள் விசாரணைக்காக அழைக்கப்படவுள்ளதாக, மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் முஹமட் நோர்டின் அப்துல்லா தெரிவித்தார்
அச்சம்பவத்தில், அரச மலேசிய கடற்படை வீரரான அந்த 27 வயது நடுவர், எட்டி உதைக்கப்பட்டதில், இடுப்பிலும், காலிலும் காயத்திற்கு இலக்காகி, ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
செத்யூ மற்றும் இஸ்கண்டார் புத்ரி மாவட்ட அணிகளுக்கு இடையிலான காற்பந்தாட்டத்தின் போது அவர் தாக்குதலுக்கு இலக்கானார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனை அல்லது ஈராயிரம் ரிங்கிட் வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
முன்னதாக, ஆடவர்கள் சிலரிடமிருந்து நடுவர் ஒருவர் தப்பியோட முயலும் காணொளி ஒன்று நேற்று முகநூலில் வைரலானது.
ஆட்ட முடிவால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கைகலப்பு மூண்டதாக நம்பப்படுகிறது.