Latestமலேசியா

பேரா ரிவர் வேலி தோட்ட தமிழ்ப் பள்ளியில் நீர் விநியோக தடைக்கு தீர்வு

ஈப்போ , மார்ச் 22 – பேரா மாநிலத்தில் ரிவர் வேலி தோட்டத் தமிழ்ப்பள்ளி கடந்த 2021 ஆண்டு முதல் எதிர்நோக்கிய நீர் விநியோகத் தடைக்கு தீர்வு காணப்பட்டது. பேரா அரசாங்கத்தின் ஏற்பாட்டில் 22,500 ரிங்கிட் செலவில் நீர் குழாய் பொருத்தபட்டு இப்பள்ளிக்கு நேரடி நீர் விநியோகம் கிடைத்துள்ளது . இது பள்ளி நிர்வாகத்திற்கும் மற்றும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மாநில அரசாங்கம் ஆதரவோடு , பேரா மாநில தமிழ்ப்பள்ளி தீர்வுக் குழு இயக்க ஏற்பாட்டில் இப்பள்ளிக்கு நீர் விநியோகம் கிடைத்தது என்று பேரா மாநில சுகாதார , மனிதவளம் ஒற்றுமை மற்றும் இந்திய நலப் பிரிவு ஆட்சிக் குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.

கடந்த 1954 இல் நிர்மாணிக்கப்பட்ட இப்பள்ளியில் தற்பொழுது 15 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி புறநகர் பள்ளியாக இருப்பதால் மாணவர்கள் சரிவு ஏற்பட்டாலும் அப்பள்ளியை தொடர்ந்து நிலை நிறுத்த வெளியில் இருந்து மாணவர்கள் கொண்டு வரப்பட்டது பாராட்டக்கூடிய நடவடிக்கை என சிவநேசன் தெரிவித்தார். மேலும் பள்ளியின் வளர்ச்சிக்காக அவர் 15,000 ரிங்கிட் மான்யத்தையும் அறிவித்தார். அப்பள்ளிக்கு இன்று வருகை அளித்த சிவநேசன் பள்ளி வளாகத்தில் புதிதாக பொருத்தப்பட்ட நீர் குழாயை திறந்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாநில கல்வி இலாகா அதிகாரி எம்.அர்ச்சுணன், இப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் கே. ஆந்திராகாந்தி உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!