
தைப்பிங், ஆக. -15 – பேரா மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான சதுரங்கப் போட்டியில் தைப்பிங் தாமான் சுங்கை மாஸிலுள்ள ஓலிரூட் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஐந்தாம் ஆண்டு மாணவர் த. மணீஷ் வாகை சூடினார். பேரா, ஶ்ரீ இஸ்கந்தார் இளைஞர் விளையாட்டு திறன் பயிற்சி மையத்தில் நடைபெற்ற மாநில நிலையிலான மூன்று நாட்கள் நடைபெற்ற அந்த போட்டியில், தேசிய நிலைக்கு தேர்வுப் பெற்ற அறுவரில் மூவர் இந்திய மாணவராவர்கள். இவர்களில் மணீஷ்சும் அடங்குவார்.
தமது தந்தையின் வழிகாட்டினாலும் ஊக்குவிப்பினாலும் சதுரங்கப் போட்டியில் அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருக்கும் மணீஷ் கடந்த ஓராண்டுக் காலமாக பள்ளி, மாவட்டம், மாநிலம் மற்றும் அனைத்துலக ரீதியில் தனியார் விளையாட்டு மன்றங்கள் நடத்திய அதிகமான போட்டிகளிலும் இவர் வெற்றிகளை குவித்துள்ளார்.
இதனிடையே மணீஷ் இவர் உட்பட இதர ஐந்து மாணவர்களும் பேரா மாநிலத்தைப் பிரதிநிதித்து அடுத்த மாதம் 19 முதல் 23 ஆம் தேதி வரை திரெங்கானு மாநிலத்தில் நடைபெறும் ஐந்து நாட்கள் தேசிய நிலை போட்டியில் கலந்துக் கொள்வார்கள்.
மாநில நிலையில் மகத்தான வாகை சூடிய மணீஷுக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்ததுடன் தொடர்ந்து அடுத்தடுத்த நிலைப் போட்டிகளிலும் சிறந்த அடைவை பெறவேண்டும் என்று பள்ளியின் தலமையாசிரியர் ஜோசப்பின் இராயப்பன் மற்றும் பள்ளி ஆசிரியர்களும் நல்லாசி கூறினர்.