பேருந்துகளில் 3 பின்களுக்கான மின் சாக்கெட்டுகள் பயன்படுத்துவது உடனடியாக நிறுத்தம் – அந்தோனி லோக்
கோலாலம்பூர் , நவ 20 – பேருந்துகளில் 3-பின்களுக்கான மின் சாக்கெட்டுகளைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தும்படி அனைத்து பேருந்து நடத்துநர்களுக்கும் போக்குவரத்து அமைச்சு உத்தரவிட்டுள்ளதாக அதன் அமைச்சர் அந்தோனி லோக் ( Anthony Loke) தெரிவித்திருக்கிறார்.
புதிய அல்லது ஏற்கனவே செயல்படும் நிறுவனங்கள் wiring அல்லது மின் இணைப்பு ஆய்வு அறிக்கை அல்லது மலேசிய தர நிர்ணயத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை தடுக்கும் நோக்கில் அமையும் இந்த நடவடிக்கைகள் மூலம் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பயணியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கடப்பாட்டை அரசாங்கம் கொண்டுள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அந்தோனி லோக் தெரிவித்தார்.
இதனிடையே இவ்வாண்டு நவம்பர் 1ஆம் தேதியன்று விரைவுப் பேருந்தில் மின்சாரம் தாக்கி 18 வயது இளைஞன் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டது. சாலைப் போக்குவரத்துத் துறை , தரை பொதுப் போக்குவரத்து நிறுவனம் , MIROS, எரிசக்தி ஆணையம் , SIRIM மற்றும் PUSPAKOM போன்ற பல நிறுவனங்களை உட்படுத்திய அந்த விசாரணைக்குழு, சம்பந்தப்பட்ட பேருந்தின் மின் இணைப்பு முறை சரியாக அமைக்கப்படவில்லையென என்பதைக் கண்டறிந்தது.