Latestமலேசியா

பைசால், சைய்ன் ராயன் விவகாரத்தில் விரிவான விசாரணை தேவை – பிரதமர் அன்வார் வலியுறுத்து

கோலாலம்பூர் , ஜூன் 14 – அசிட் தாக்குதலுக்கு உள்ளான பிரபல காற்பந்து விளையாட்டாளர் பைசால் ஹலிம் ( Faisal Halim) மற்றும் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் சைய்ன் ராயன் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தும்படி போலீசிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பணித்துள்ளார்.

பைசால் மற்றும் சைய்ன் ராயனுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூரத்தை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். எனினும் இந்த விவகாரத்தில் சொந்த அனுமானம் இன்றி விரிவான நடைமுறைக்கு ஏற்ப விசாரணை நடத்தவேண்டியது அவசியம் என அன்வார் வலியுறுத்தினார்.

தற்போது எங்கு பார்த்தாலும் காற்பந்து விளையாட்டாளர் பைசால் மற்றும் சிறுவன் சைய்ன் ராயன் ஆகியோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூரங்கள் குறித்து அதிகமாக பேசப்படுகிறது. பாதிக்கப்பட்ட அந்த இருவர் மீது நானும் பரிவு கொள்கிறேன் .

நாட்டின் பிரதமராக இருந்தாலும் நானும் மனிதன்தான். அவர்களுக்கு இப்படி நடந்தது ஏன் என்று நானும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு சிறுவனை துன்புறுத்தி கொடூரமாக கொலை செய்திருப்பவர்கள் யார் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.

என்னைப் பொறுத்தவரை நாளைக்கே போலீஸ் பதில் கூற வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் போலீஸ் சில நடைமுறையை பின்பற்ற வேண்டியிருப்பதாக அன்வார் கூறினார்.

போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின் உசேய்ன் (Tan Sri Razarudin Husain), புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத்துறை இயக்குனர் டத்தோஸ்ரீ முகமட் சுஹாய்லி ( Mohd Suhaily ) ஆகியோரை அண்மையில் அழைத்து எந்த தலையிடும் இன்றி இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பில் விசாரணையை தீவிரப்படுத்தும்படி கேட்டுக்கொண்டதாகவும் அன்வார் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!