
கோலாம்பூர், ஜன 15 – தைப்பொங்கலை முன்னிட்டு பத்துமலை திருத்தலம், கோலாலம்பூர் ஜாலான் பண்டார் ஸ்ரீ மாரியம்மன் ஆலயம், ஜாலான் புடு, கோர்ட்டு மலை பிள்ளையார் ஆலயம் உட்பட நாட்டிலுள்ள பல இடங்களில் உள்ள ஆலயங்களில் இன்று காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அந்த பூஜைகளில் பலர் தங்களது குடும்பத்தோடு கலந்துகொண்டனர். ஈப்போ கல்லுமலை ஸ்ரீ சுப்ரமணியம் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பொங்கல் என்பது தமிழர்களின் மரபு மற்றும் கலச்சார விழாவாக இருப்பதால் அதன் முக்கியத்துவத்தை பெற்றோர்கள் பிள்ளைகளிடம் வலியுறுத்த வேண்டும் என தமதுரையில் ஆலயத்தின் தலைவர் எம்.விவேகனந்தா வலியுற்றுத்தினர்.
இதனிடையே பொங்கல் வைப்பதற்கு காலை மாலை என இரு வேளையிலும் சிறந்த நேரம் அறிவிக்கப்பட்டதால் பலர் தங்களது வீடுகளில் இன்று காலையில் குடும்பத்தோடு பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். வேற்றுமையில் ஒன்றுமை காணும் மலேசிய கலாச்சாரத்திற்கு ஏற்ப மற்ற சமூகத்தினருக்கும் இனிப்புகளையும், பொங்கலையும் வழங்கி அவர்கள் தங்களது மகிழ்ச்சியையும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.