
கோலாலம்பூர், நவ 16 – பொதுச் சேவைத் துறையில் கடந்த ஆண்டு வேலைக்கு அமர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை இன விகிதாச்சார அடிப்படையில் நியாயமாக இருந்ததாக சிறப்பு பணிகளுக்கான அமைச்சர் அர்மிசான் அலி தெரிவித்திருக்கிறார். விண்ணப்பம் செய்த 38,0005 இந்தியர்களில் 3,682 பேர் நேர்க்காணலுக்கு அழைக்கப்பட்ட பின் 991 பேர் அரசு சேவையில் வேலையில் நியமிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்ட மலாய்க்காரர்களில் 24.9 விழுக்காட்டினர் வேலைக்கு அமர்த்தப்பட்ட நிலையில் இந்தியர்கள் 27 விழுக்காட்டினர் வேலைக்கு எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட எழுத்துப் பூர்வமான பதிலில் அர்மிசான் இத்தகவலை வெளியிட்டார்.
அனைத்து மலேசியர்களும், இன வேறுபாடின்றி, அரசாங்க வேலைகளில் இணைவதில் நியாயமான வாய்ப்புகள் உள்ளதை இது பிரதிபலிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுச் சேவைக்கு ஆட்களை நிரப்புவதற்காக மேற்கொள்ளப்படும் முறையும், கூட்டரசு அரசு சேவை ஊழியர்களை நியமிக்கும் நடைமுறையும் வெளிப்படையாகவும் திறமை மற்றும் ஆற்றல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதாகவும் அரசு சேவை பதவிகளை நிரப்புவதில் குறிப்பிட்ட சில இனத்திற்கு கோட்டா முறை சலுகை பயன்படுத்தப்படுவதில்லை என்றும் Armizan தெரிவித்தார். சிறுபான்மையினர் உட்பட அனைவருக்கும் நியாயமான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டதோடு பதவிகளுக்கு பரிசீலிக்கும்போதும் நியாயமான அணுகுமுறை கையாளப்படுவதாகவும் அவர் கூறினார்.