கோலாலம்பூர், டிச 10 – பொதுச் சேவைத் துறையில் PTD எனப்படும் நிர்வாக மற்றும் அரசதந்திர அதிகாரிகளாக ( Pegawai Tadbir dan Diplomatic ) 620 இந்தியர்கள் மட்டுமே பணியாற்றி வருவதாக இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாண்டு அக்டோபர் மாதம் 31 ஆம்தேதிவரை மொத்தம் 10,348 பேர் PTD அதிகாரிகளாக இருக்கின்றனர். இவர்களில் 5.99 விழுக்காட்டினர் மட்டுமே இந்தியர்கள் என பிரதமர் துறைக்கான கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் ஸலேஹா முஸ்தபா ( Zaliha Mustafa ) தெரிவித்திருக்கிறார்.
தற்போது பொதுச் சேவைத்துறையில் PTD அதிகாரிகளாக இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை குறித்து பிரதமர் தெரிவிக்க வேண்டும் என செனட்டர் சிவராஜ் சந்திரன் எழுப்பிய வாய்மொழி கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக வழங்கிய பதிலில் Zaliha இத்தகவலை வெளியிட்டார்
பொதுச் சேவைத்துறையில் மலேசியாவிலுள்ள அனைத்து இனங்களுக்கும் வாய்ப்பு வழங்குவதை உறுதி செய்யும் கடப்பாட்டை அரசாங்கம் எப்போதும் கொண்டிருப்பதாகவும் ஆர்வத்தைக் கொண்ட பல்வேறு இனங்கள் மற்றும் சமூக பின்னணியைக் கொண்டவர்கள் பொதுச்சேவைத் துறையில் பணியாற்ற விரும்பினால் நியாயமான முறையில் வாய்ப்பு வழங்கப்படும் .
அரசுத் துறைகளில் பணிபுரியும் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பிரச்சாரங்கள் மற்றும் வேலை வாய்ப்பு கண்காட்சிகள் மூலம் அறிமுக நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்படும் என டாக்டர் Zaliha தெரிவித்தார்.