கோலாலம்பூர், மார்ச் 2 – 15 ஆவது பொதுத் தேர்தலை விரைந்து நடத்தும்படி பிரதமர் டத்தோஸ்ரீ Ismail Sabri Yaakob பிற்கு அம்னோவின் துணைத்தலைவர் முகமட் ஹசான் நெருக்குதல் கொடுத்து வருவது குறித்து பாசீர் சாலாக் எம்.பி தாஜூடின் அப்துல் ரஹ்மான் சாடினார்.
அம்னோவின் மூத்த தலைவரான முகமட் ஹசான் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கை தமக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறினார். கடந்த ஆண்டு பக்காத்தான் ஹராப்பானுடன் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்பாட்டினால் அரசாங்கம் இப்போது நிலைத்தன்மையுடன் இருக்கிறது.
அதற்குள் அடுத்த பொதுத்தேர்தல் நடத்தும்படி பிரதமரை முகமட் ஹசான் வலியுறுத்த வேண்டிய அவசியம் ஏன் என்று நாடாளுமன்றத்தில் அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது தாஜூடின் வினவினார்.
பொதுத் தேர்தல் நடத்துவதில் பேரரசரை வலியுறுத்துவதில் வெற்றி பெறத் தவறினால் பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும் முகமட் ஹசான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இப்படிப்பட்ட எச்சரிக்கை கட்சியின் உயர்மட்ட தலைவரிடமிருந்து வந்திருப்பது குறித்து தாம் கவலை அடைவதாகவும் தாஜூடின் விவரித்தார்.