புத்ராஜெயா, ஆகஸ்ட்-22 – பொது இடங்களில் குற்றவாளிகளுக்கு எதிராக போலீஸ் நடத்தும் துப்பாக்கிச் சூடுகள் கண்மூடித்தனமான நடவடிக்கைகள் அல்ல!
மாறாக, பொது மக்களின் பாதுகாப்பை நன்கு கருத்தில் கொண்ட பிறகே அவ்வாறு செய்யப்படுவதாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் (Datuk Seri Saifuddin Nazution Ismail) தெரிவித்தார்.
திறந்தவெளிகளில் துப்பாக்கி பிரயோகம் நடத்துவதற்கு அவசியம் ஏற்படும் பட்சத்தில், மிகவும் பொறுப்போடும் தொழில் தர்மத்தோடும் போலீஸ் நடந்து கொள்ளுமென்றார் அவர்.
அத்தகையச் சூழ்நிலைகளில், பொது மக்கள் பாதிக்கப்படாதிருப்பதை உறுதிச் செய்வதோடு, குற்றவாளிகளைச் சுற்றி வளைக்கும் இடம், எந்த கோணம் என்ற அம்சங்கள் எல்லாம் மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டே நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதுகாப்பு விஷயத்தில் போலீஸ் கண்மூடித்தனமாக நடந்துக் கொள்வதில்லை என அமைச்சர் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை மாலையில் சிலாங்கூர் சுபாங் ஜெயாவில் போலீசுக்கும் குற்றவாளிக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த சம்பவம் வைரலானது குறித்து அவர் கருத்துரைத்தார்.
அச்சம்பவத்தில் ஆப்ரிக்க நாட்டு குற்றவாளி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
அந்நபர், 2018-ஆம் ஆண்டிலிருந்து சுமார் 45 குற்றவியல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 10 பேரடங்கிய கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவன் என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.