
புத்ராஜெயா, பிப் 7 – பொது – தனியார் துறைகளில் ஊழல் அற்ற சுற்றுச் சூழலை உருவாக்க, நாட்டில் ஊழலை துடைத்தொழிக்கும் முயற்சிகள் அதிகரிக்கப்பட வேண்டுமென, மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் கூறியுள்ளார்.
இவ்வேளையில், அரசாங்க சேவை தரத்தை மக்கள் அணுக்கமாக கண்காணித்து வரும் நிலையில், ஊழலைத் துடைத்தொழிக்கும் முயற்சிகளில் அரசாங்கம் அதிகம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
கடந்தாண்டு CPI எனப்படும் ஊழல் கண்ணோட்ட குறியீட்டில், 180 நாடுகளின் வரிசையில் மலேசியா 61-வது இடத்தில் இருந்து 62-வது இடத்திற்கு உயர்ந்தது.
இதனிடையே, Transparency International அமைப்பு வெளியிட்ட குறியீட்டில், கடந்தாண்டு மலேசியா 48 புள்ளிகளில் இருந்து 47 புள்ளிகளுக்கு குறைந்ததாக வி. சிவக்குமார் கூறினார்.
புத்ராஜெயாவில் , HRD Corp மனதவள மேம்பாட்டு கழகத்தின் ஊழலை துடைத்தொழிக்கும் முயற்சிகள் அடங்கிய திட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றும் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
முன்னதாக, தமதுரையில், நிர்வாகம், கொள்முதல், அமலாக்கம் ஆகிய பிரிவுகளில் ஊழல், அதிகார முறைகேடு, மோசடி ஆகியவற்றைக் களைய HRD Corp மேற்கொண்டிருக்கும் முயற்சிகளை வி. சிவக்குமார் பாராட்டினார்.