பொந்தியான், செப்டம்பர் -20, ஜோகூர் பொந்தியானில் வாழைத் தோட்டத்து கால்வாயில் விழுந்து சிக்கிக் கொண்ட 200 கிலோ கிராம் எடையிலான தாபீர் (tapir) விலங்கு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.
Benut, Kampung Parit Mastar-ரில் நேற்று காலை 8 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்தது.
சம்பவ இடம் வந்தடைந்த பொது தற்காப்புப் படை வீரர்கள் கிராமத்து மக்கள் துணையுடன் கயிற்றைக் கட்டி அந்த பெண் தாபீரை மேலே இழுத்தனர்.
4 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தாபீர் மேலே கொண்டு வரப்பட்டு, ஜோகூர் வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN வசம் ஒப்படைக்கப்பட்டது.
தாபீரை இதற்கு முன் அப்பகுதியில் கண்டதில்லை என கிராமத்து மக்கள் கூறிய நிலையில், அது எங்கிருந்தோ வழி தவறி வாழைத் தோட்டத்திற்குள் புகுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.