
கோத்தா கினபாலு, செப் 19 – தளவாட சாதனத்தை விநியோகிக்காத போதிலும் அது விநியோகிக்கப்பட்டதாகக்கூறி பொய்யாக 17,200 ரிங்கிட் பணக் கோரிக்கைக்கு விண்ணப்பம் செய்ததன் தொடர்பில் சபா அரசு ஊழியர் ஒருவரை எம்.ஏ.சி.சி கைது செய்தது. 50 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழி இன்று காலை மணி 10.40 அளவில் சபா எம்.ஏ.சி.சி அலுவலகத்தில் கைது செய்யப்பட்டார் . வாக்குமூலம் பதிவு செய்வதற்கு மாநில எம்.ஏ.சி.சி அலுவலகத்திற்கு அந்த சந்தேக நபர் அழைக்கப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக எம்.ஏ.சி.சிக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவித்தன.
அரசாங்கத்துறையில் வேலை செய்து வந்த அந்த நபர் 2017 ஆம் ஆண்டில் சபாவிலுள்ள பயிற்சி நிலையத்திலுள்ள மாணவர்களுக்கு தளவாட சாதனம் விநியோகம் செய்ததாகக்கூறி பொய் பணக் கோரிக்கைக்கு விண்ணப்பித்ததை சபா எம்.ஏ.சி.சி இயக்குனர் டத்தோ S. கருணாநிதி உறுதிப்படுத்தினார். 2009ஆம் ஆண்டின் MACC சட்டத்தின் 18 ஆவது விதியின் கீழ் அந்த நபருக்கு எதிதராக விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். 5,000 ரிங்கிட் போலீஸ் ஜாமினில் அந்த நபர் விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு எதிராக இன்று சிறப்பு லஞ்ச ஊழல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.