
தெலுக் இந்தான், செப்டம்பர் 1 – நண்பரை கொலை செய்ததாக நம்பப்படும், 17 வயது பதின்ம வயது இளைஞன் ஒருவனுக்கு எதிராக இன்று தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், கொலை வழக்கு உயர் நிதிமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால், பள்ளி படிப்பை மேற்கொள்ளாத அந்த இளைஞனிடமிருந்து வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.
ஆகஸ்ட்டு, 20-ஆம் தேதி, மாலை மணி ஆறுக்கும், இரவு மணி 8.30-க்கும் இடைப்பட்ட நேரத்தில், பேராக், பாகான் டத்தோவிலுள்ள, ஜாலான் பாசிர் சுங்கை கம்போங் பாரோ சாலையோரத்தில், 21 வயது ஹரிஹரனை கொலை செய்ததாக, அவனுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும், பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
இவ்வழக்கு விசாரணை அக்டோபர் ஐந்தாம் தேதி செவிமடுக்கப்படும்.
முன்னதாக, ஆகஸ்ட்டு 23-ஆம் தேதி, செம்பனை தோட்டம் ஒன்றின் கால்வாயிலிருந்து, ஹரிஹரனின் அழுகிய உடலை பொதுமக்கள் கண்டுபிடித்தனர்.
மூன்று நாட்களுக்கு பின், ஊத்தான் மெலிந்தாங்கில், அந்த 17 வயது சந்தேக நபரை போலீசார் கைதுச் செய்தனர்.
தனது காதலிக்கு தொல்லை கொடுத்து வந்ததால், ஹரிஹரனை அவன் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.