
கோலாலம்பூர், செப் 11 – இவ்வாண்டின் முதல் எட்டு மாதங்களில் போக்குவரத்து மற்றும் சாலை விதிமுறைகளை மீறியதற்காக 2.56 மில்லியன் போக்குவரத்து சம்மன்களைப் போலீஸ் விநியோகித்துள்ளது. 1.57 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட அந்த சம்மன்கள் குற்றம் புரிந்த இடத்திலேயே வழங்கப்பட்டவை என புக்கிட் அமான் போக்குவத்து விசாரணை மற்றும் அமலாக்கத்துறையின் இயக்குனர் டத்தோஸ்ரீ மாட் காசிம் கரீம் தெரிவித்தார். கேமராக்கள் மற்றும் அமலாக்க நடவடிக்கையின்போது கண்டறியப்பட்ட போக்குவரத்து குற்றங்களுக்காக 1.03 மில்லியன் சம்மன்கள் விநியோகிக்கப்பட்டதாக அவர் கூறினார். போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக 985,635 சம்மன்கள் வழங்கப்பட்தாக மாட் காசிம் கரீம் கூறினார். வேகக் கட்டுப்பாட்டை மீறியது, போக்குவரத்து சமிக்ஞைகளைப் புறக்கணித்தது, சாலையில் இரட்டை கோடுகளை மீறிச் சென்றது, வரிசைகளை முந்திச் சென்றது, மற்றும் வாகனங்கள் ஓட்டும்போது கைதொலைபேசிகளைப் பயன்படுத்தும் குற்றங்களில் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். மேலும் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் ஓட்டிய குற்றத்திற்காக 555,002 பேருக்குச் சம்மன்கள் விநியோகிக்கப்பட்டதாக மாட் காசிம் கரிம் தெரிவித்தார்.