
கோலாலம்பூர், நவ 18 – பெரும்பாலான நேரங்களில், உயர்கல்விக்கூட மாணவர்கள் “இன்டர்ன்ஷிப்” பணியிட பயிற்சி வாய்ப்புகளை தேடும் போது, தேவையான அனுபவங்களை தரும் நிறுவனங்களைத்தான் தேடுவார்கள்.
எந்த நிறுவனத்தை தேர்வுச் செய்தாலும், பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் தக்க அலவன்ஸ் வழங்கப்படும் என்பது தான் அவர்களின் நம்பிக்கையாக இருக்கும்.
எனினும், உள்நாட்டு கிராபிக் டிசைன் வடிவமைப்பு நிறுவனத்திற்கு மாணவர் ஒருவர், வேலையிட பயிற்சிக்கான விண்ணப்பம் செய்து அனுப்பியிருந்த மின்னஞ்சல் ஒன்று வைரலாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அப்படி அந்த மின்னஞ்சலில் என்ன தான் இருந்தது என்கிறீர்களா?
வேலையிட பயிற்சிக்கு விண்ணப்பம் செய்திருந்த மாணவர் ஒருவர், தமக்கு போக்குவரத்து, தங்குமிடம், உணவு உட்பட மாதம்தோறும் மூவாயிரம் ரிங்கிட் சம்பளம் வழங்கப்பட வேண்டுமென கோரியிருந்ததே அதற்கு காரணம் ஆகும்.
அதுமட்டுமல்லாமல், போனஸ் ஊக்குவிப்புத் தொகையும் வழங்கப்படுமா எனவும், அம்மாணவர் அந்த மின்னஞ்சலில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அந்த வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டால் மட்டுமே, எனது விவரங்களை உங்களுக்கு அனுப்புவேன் என அம்மாணவர் குறிப்பிட்டிருந்தது, நிறுவனத்தின் உரிமையாளரை மட்டுமல்ல ஒட்டு மொத்த இணைய பயனர்களையும் திகைக்கச் செய்துள்ளது.
“முழு நேரம் வேலை செய்பவர்களே பல சமயங்களில் அந்த சம்பளத்தையும், வசதிகளையும் பெறுவதில்லை. அதனால், அம்மாணவர் தனது அப்பாவின் நிறுவனத்தில் வேலைக்கு சேர்வதே நல்லது” என இணைய பயனர் ஒருவர் பதிவிட்டுள்ள வேளை ;
வேலையிட பயிற்சிக்கு வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடும் பலர் இருக்கும் சமயத்தில் இப்படி அதிகாரத் தோரணையில் மூவாயிரம் ரிங்கிட் சம்பளம் கேட்கும் மாணவர்களும் இருப்பது ஆச்சரியம்தான் எனவும் சிலர் கூறியுள்ளனர்.