செந்தோசா, நவம்பர்-21 – அந்நியத் தொழிலாளர்களையே நம்பியிருப்பதைக் குறைக்க, உள்நாட்டினருக்கு போட்டித் தன்மைமிக்க ஊதியம் வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதிச் செய்ய வேண்டும்.
நல்ல சம்பளத்துடன் நியாயமான வேலை நிபந்தனைகளுடன் வரும் வேலை வாய்ப்புகளில் மலேசியர்களுக்கே முன்னுரிமைத் தரப்பட வேண்டுமென, சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் Dr குணராஜ் ஜியோர்ஜ் கேட்டுக் கொண்டார்.
எண்ணெய் நிலைய café கடைகளிலும் பல்பொருள் விற்பனைக் கடைகளிலும் அந்நிய நாட்டவர்களை வேலைக்கமர்த்த அனுமதிக்கப்படுவதாக உள்துறை அமைச்சு கூறியிருப்பது குறித்து கருத்துரைத்த போது அவர் அவ்வாறு சொன்னார்.
அரசாங்கத்தின் அம்முடிவு, காலச் சூழலுக்கு ஏற்ப வளர்ந்து வரும் அத்தொழில்துறையின் தேவையை உணர்த்துகிறது.
ஆனால், மலேசியர்களை நாம் புறந்தள்ளி விட முடியாது; மிகக் குறைந்த ஊதியத்தை கொடுத்தால் அவர்களை கவர்ந்திழுக்க முடியாது.
இதனால் நாம் தொடர்ந்து அந்நியத் தொழிலாளர்களையே சார்ந்திருக்க வேண்டுமென குணராஜ் சுட்டிக் காட்டினார்.
உள்நாட்டுத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை பிரச்னையைத் தீர்க்க, சமச்சீரான அணுகுமுறை அவசியமென அவர் சொன்னார்.
இவ்வேளையில், முகவர்கள் மூலமாக அல்லாமல் வெளிநாட்டவர்களை நேரடியாகவே வேலைக்கெடுக்க எண்ணெய் நிலைய நடத்துநர்களை அனுமதிக்கும் முடிவையும் குணராஜ் வரவேற்றுள்ளார்.
இதன் மூலம், முகவர்கள் என்ற பெயரில் பொறுப்பற்ற இடைத்தரகர்கள் அந்நியத் தொழிலாளர்களை சுரண்டுவதைத் தடுக்க முடியும்.
முதலாளிகளின் நேரடி பார்வையின் கீழ் வருவதன் மூலம் அந்நியத் தொழிலாளர்கள் நியாயமாக நடத்தப்படுவதை உறுதிச் செய்ய முடியுமென்றார் அவர்.