
ஜோகூர் பாரு, ஜன 23 – ஜோகூரை தளமாகக் கொண்டு 3.68 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதோடு , கள்ள நோட்டு, லைசென்ஸ் மற்றும் மை கார்ட் விற்பனை செய்துவந்த கும்பல் ஒன்று முறியடிக்கப்பட்டது.
ஜனவரி 13ஆம் தேதி பிற்பகல் மணி 1.15க்கும் மறுநாள் காலை மணி 7 .30 க்குமிடையே மேற்கொள்ளப்பட்ட நான்கு சோதனை நடவடிக்கையின்போது இந்த சட்டவிரோத கும்பலின் செயல் அம்பலத்திற்கு வந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இக்கும்பல் செயல்பட்டு வந்துள்ளதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ எம்.குமார் தெரிவித்தார்.
இந்த அதிரடி சோதனையின்போது இரண்டு வாகனங்களிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வாடகை வீட்டிலிருந்து அந்த கும்பலின் உறுப்பினர்கள் என நம்பப்படும் 30 மற்றும் 33 வயதுடைய இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அந்த இருவரும் இதற்கு முன் போதைப் பொருள் குற்றச்செயல் பின்னணியை கொண்டிருந்தவர்களாவர். அவர்களில் ஒருவன் போலீசின் தேடும் பட்டியலில் இடம்பெற்றிருந்தான். அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் Honda City மற்றும் Proton Waja கார்களையும் வாடகைக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்த கார்கள் கடந்த ஆண்டு சிலாங்கூர் ,காஜாங்கில் திருடுபோனதாக புகார் செய்யப்பட்டவையாகும். இந்த வாகனங்கள் போதைப் பொருள் விநியோகிப்படுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்ததாக நம்பப்படுகிறது. ஜோகூர் பாருவில் தாமான் பெலாங்கியிலுள்ள வீடு மற்றும் லார்க்கினிலுள்ள ஆடம்பர அடுக்குமாடி வீடுகளில் போலீசார் சோனை நடத்தினர்.
போதைப் பொருட்களை பொட்டலமிட்டபின் அவற்றை பத்திரப்படுத்தி வைப்பதற்கு அந்த இரு வீடுகள் பயன்படுத்தப்பட்டு வந்ததாக குமார் கூறினார். மேலும் 13 போலீ மை கார்டுகள், ஓட்டுநர்களின் லைசென்ஸ்கள், 10, 20 மற்றும் 100 ரிங்கிட் கள்ள நோட்டுக்கள் மற்றும் போலியாக்கப்பட்ட 10 ஏ.டி.எம் கார்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த இரண்டு வீடுகளிருந்தும் RM3,682,871 ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.