சிரம்பான், ஆகஸ்ட் 14 – மின் இணைப்புக் கம்பிகளைப் பொருத்தும் பணியை
மேற்கொண்டிருந்த மண்வாரி இயந்திரத்தை வாகனம் ஒன்று மோதிய
சம்பவத்தில் இருவர் பலியானதோடு மேலும் நால்வர் காயங்களுக்குள்ளாயினர்.
போர்ட்டிக்சன், கம்போங் கெலாம் (Kampung Gelam) சாலை சமிஞ்ஞை விளக்கு அருகே நடந்த அச்சம்பவத்தில் 24 வயதுடைய வாகன ஓட்டுநரும், உயர்கல்விக்கூட மாணவியான 18 வயது பெண்ணும் அகால மரணமடைந்ததாக போர்ட்டிக்சன் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிடெண்டன் அய்டி ஷாம் முகமட் (Aidi Sham Mohamed) கூறினார்.
இதனிடையே, அவ்வாகனத்தில் பயணம் செய்த 16 முதல் 19 வயது வரையிலான நால்வர் காயங்களுக்குள்ளான வேளையில், மண்வாரி இயந்திரத்தின் ஓட்டுநர் காயமின்றி உயிர்த் தப்பியதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
போர்ட்டிக்சனிலிருந்து சிரம்பான் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த வாகனம் சாலையில் வைக்கப்பட்டிருந்த ‘கோன்’ எனப்படும் தற்காலிக சாலைத் தடுப்பினை தவிர்க்க முயன்றுள்ளது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்து, கேபிள்களைப் பதிப்பதற்காகச் சாலையோரம் குழி தோண்டிக் கொண்டிருந்த மண்வாரி இயந்திரத்தை அவ்வாகனம் மோதியது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.