போர்டிக்சன், அக்டோபர்-9 – நெகிரி செம்பிலான், போர்டிக்சனில் ஆதரவற்ற 6 வயது சிறுவனை துன்புறுத்தியதன் பேரில், ஒப்பனைக் கலைஞர்களான 3 ஆடவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுவனையும் Batu 4-லில் உள்ள ஒரு வீட்டின் அறையிலிருந்து பாதுகாப்பாக மீட்டதாக மாவட்ட போலீஸ் கூறியது.
அச்சிறுவன் அழுதுகொண்டே இருந்ததாகவும், அவனது உடலில் காயத் தளும்புகளை கண்டதாகவும், இதற்கு முன் அவனைப் பராமரித்து வந்த 67 வயது மூதாட்டி போலீசில் புகார் செய்ததை அடுத்து அச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
தந்தை இறந்ததும் தாயும் கைவிட்டதால், சிறு வயதிலிருந்தே அச்சிறுவன் புகார்தாரரின் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளான்.
பின்னர், கைதான சந்தேக நபர்களில் ஒருவரால் 2021-ஆம் ஆண்டிலிருந்து அவன் தத்தெடுக்கப்பட்டான்.
எனினும் எதற்கெடுத்தாலும் அடம் பிடிப்பதும், வீட்டைச் சுற்றி சிறுநீர் கழிப்பதுமாக இருந்ததால், வளர்ப்புத் தந்தையும் அவரின் இரு சகாக்களும் அடித்து துன்புறுத்தியது விசாரணையில் கண்டறியப்பட்டது.
வளர்ப்புத் தந்தையிடம் இருந்தாலும் அடிக்கடி கைப்பேசியிலும் வீடியோ அழைப்பிலும் தன்னிடம் பேசி வந்த பேரனிடமிருந்து, திடீரென அழைப்பேதும் வராததால் சந்தேகம் கொண்ட மூதாட்டி, மகனை அனுப்பி பார்க்க சொன்ன போது விஷயம் அம்பலமானது.