கோலாலம்பூர், ஜனவரி-3, கோலாலம்பூரில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனையில் மூவர் கைதானதை அடுத்து, போலி பயணப் பத்திரங்களைத் தயாரிப்பதில் கில்லாடியான கும்பலொன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
3 வாரங்களாக உளவுப் பார்த்து கடந்த திங்கட்கிழமையன்று அந்த அதிரடிச் சோதனையில் இறங்கியதாக, குடிநுழைவுத் துறையின் இயக்குநர் Wan Mohammed Saupee Wan Yusoff தெரிவித்தார்.
அக்கும்பலின் மூளையாகச் செயல்பட்ட 36 வயது பாகிஸ்தானிய ஆடவன், அவனது 27 வயது காதலி, காதலியின் உறவுக்காரரான 16 வயது பெண் ஆகியோரே கைதானவர்கள் ஆவர்.
தற்காலிக வேலை பெர்மிட், குடிநுழைவுத் துறையின் பாதுகாப்பு ஸ்டாம்ப், வட்டார நாடுகளுக்கான விமான டிக்கெட் என குடிநுழைவுத் துறையின் பல்வேறு ஆவணங்களை அக்கும்பல் போலியாகத் தயாரித்து வந்துள்ளது.
மலேசியாவில் அனுமதிக்கப்பட்ட காலத்தை விட நீண்ட நாள் தங்கியிருப்போர் மற்றும் கள்ளக்குடியேறிகளே அக்கும்பலின் முதன்மைக் குறியாகும்.
அவர்களிடத்தில் போலி பாதுகாப்பு ஸ்டாம்ப்பை தலா 350 ரிங்கிட்டுக்கு விற்று 150 ரிங்கிட் இலாபம் பார்த்து வந்துள்ளனர்.
பிலிப்பின்ஸ், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் போலிக் கடப்பிதழ்கள், போலி விமான டிக்கெட்டுகள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
குடிநுழைவுச் சட்டம் மற்றும் கடப்பிதழ் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட ஏதுவாக சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.