கோலா திரெங்கானு, ஆக 9 – போலி கல்விச் சான்றிதழ் விற்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை திரெங்கானு சுல்தான் ஜைனால் அபிடின் பல்கலைக்கழகம் (Universiti Sultan Zainal Abidin (UniSZA) ) மறுத்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்களை கடுமையாக கருதுவதோடு தனது டிப்ளோமா திட்டங்கள் மற்றும் உயர்க் கல்வி பட்டப்படிப்பு சான்றிதழின் தரங்களை தொடர்ந்து நிலைநாட்டுவதில் விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லையென இன்று சுல்தான் ஜைனால் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
மலேசிய கல்வி தகுதி நிறுவனம் மற்றும் உயர்க் கல்வி அமைச்சு நிர்ணயித்துள்ள தரங்கள் தொடர்ந்து பின்பற்றப்படுவதை பல்கலைக்கழகம் எப்போதும் உறுதிப்படுத்தும்.
அதோடு பல்கலைக்கழகத்தின் நலன்கள் மற்றும் அதன் நற்பெயரை பாதுகாப்பதற்கு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என சுல்தான் ஜைனால் பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பெறப்படும் தகவல்கள் குறித்து கருத்துக்களை வெளியிடுவதற்கு முன் அதன் நம்பகத்தன்மையை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என பொதுமக்களை அந்த பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்டது.