சுங்கை பூலோ, செப்டம்பர் -2, சுங்கை பூலோ, சுபாங் பெர்டானாவில் உள்ள எண்ணெய் நிலையமொன்றில் 2 போலீஸ்காரர்களால் ‘தொந்தரவுச்’ செய்யப்பட்டதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளோட்டி, அது குறித்து புகார் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
CCTV கேமரா பதிவு வாயிலாக நேற்று முதல் அச்சம்பவம் வைரலானதை அடுத்து, சுங்கை பூலோ போலீஸ் அவ்வாறு அறிவுறுத்தியது.
கம்போங் பாரு சுபாங் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த ரோந்து போலீசார் இருவர், எண்ணெய் நிலையத்தில் நின்றிருந்த மோட்டார் சைக்கிளோட்டியை நெருங்குவது வைரல் வீடியோவில் தெரிகிறது.
என்றாலும், குற்றச்செயல்களைத் தடுக்க வாகனங்களை பரிசோதனை செய்வது போலீசின் அன்றாட கடமையாகும்.
இந்நிலையில் இது போன்ற வீடியோக்கள் பரவி போலீஸ் மீது குறிப்பாக சுங்கை பூலோ போலீசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி போலீஸ் புகார் செய்து, விசாரணைகளுக்கு உதவ வேண்டுமென சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டன்ட் மொஹமட் ஹஃவிஸ் முஹமட் நோர் (Mohd Hafiz Muhammad Nor) தெரிவித்தார்.
பொது மக்களும் வீடியோவை வைரலாக்க வேண்டாமென அவர் கேட்டுக் கொண்டார்.