
ஈப்போ, செப்டம்பர் 19 – மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர், போலீஸ் அதிகாரி ஒருவரின் மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளும் காணொளி, பழைய சம்பவமாகும்.
இவ்வாண்டு ஏப்ரல் 26-ஆம் தேதி நிகழ்ந்த அச்சம்பவம், ஒரு தற்செயலான விபத்து என, முஹலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் முஹமட் ஹஸ்னி முஹமட் நாசிர் தெரிவித்தார்.
சம்பவ நாள் அன்று, மோட்டார் சைக்கிள் ரோந்துப் பிரிவை சேர்ந்த இரு போலீஸ் அதிகாரிகள், பூர்வகுடி மக்களின் POS BERSIH குடியிருப்புப் பகுதியை நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர்.
வழி தெரியாததால், அப்பகுதி மக்களிடம் கேட்பதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்திய போலீஸ் அதிகாரியை, பின்னாலிருந்து வந்த மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் தவறுதலாக மோதித் தள்ளினார்.
எனினும், அச்சம்பவத்தில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
அதனால், அரச மலேசிய போலீஸ் படையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான ஊகங்களையும், எதிர்மறையான கருத்துகளையும் பகிரவோ பரப்பவோ வேண்டாம் என பொதுமக்களுக்கு ஹஸ்னி அறிவுறுத்தினார்.