கோலாலம்பூர், ஜூலை 5 – நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த மஇகாவின் முன்னாள் துணைத்தலைவரான டான் ஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் இன்று இரவு மணி 8 வாக்கில் காலமானார்.
78 வயதான தமது தந்தை உறக்கத்திலேயே உயிர் நீத்ததாக அவரது புதல்வர் சுந்தர் தெரிவித்தார்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட டான் ஸ்ரீ எஸ். சுப்ரமணியம் கடந்த 11 ஆண்டுகளாக படுத்த படுக்கையாகவே இருந்தார்.
1974 -ஆம் ஆண்டிலிருந்து 1982 ஆம் ஆண்டு வரை இரு தவணைகள் டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சுப்ரமணியம், பின்னர் அரசியலில் இருந்து விலகும் வரையில் நான்கு தவணைகள் செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றினார்.
அதோடு, 1995 -ஆம் ஆண்டிலிருந்து 2004- ஆம் ஆண்டு வரையில் உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகார துணையமைச்சராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார்.
மஇகாவின் கட்சித் தலைவராக துன் சாமிவேலு இருந்த கால கட்டத்தில் அவருடன் சுமூகமான உறவைக் கொண்டிருக்காத சுப்ரமணியம், 11 -வது பொதுத் தேர்தலின்போது போட்டியிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
பின்னர் 2006 கட்சித் தேர்தலின்போது , துணைத்தலைவர் பதவியைத் தற்காத்துப் போட்டியிட்ட அவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவிடம் தோல்வி கண்டார்.
அவரது இறுதிச் சடங்கு பெட்டாலிங் ஜெயா செக்ஷன் 16 -இல் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். அவருக்கு மனைவி புவான்ஸ்ரீ தீனா சுப்ரமணியம், இரு மகன்கள், ஒரு மகள் உள்ளார்.
டான்ஸ்ரீ சுப்ரமணியம் காலமானதை தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பினாங்கு முதலமைச்சர் டாக்டர் பி.ராமசாமி தமது ஆர்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார். அரசியலில் நல்ல பண்பாளராகவும் என்றும் நட்பு பாராட்டும் உன்னத தலைவராக விளங்கிய முன்னாள் துணையமைச்சருமான சுப்ரா ம.இ.கா மூலம் இந்திய சமூகத்திற்கு மட்டுமின்றி டமன்சாரா மற்றும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய காலத்தில் கட்சி வேறுபாடு இன்றி அனைத்து சமூகத்திற்கும் சிறந்த சேவையாற்றிய தலைவர் என்ற முறையில் மலேசிய வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பார் என டாக்டர் ராமசாமி வெளியிட்ட அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.