
கோலாலம்பூர், மார்ச் 19 – இந்நாட்டு இந்தியர்களின் நலனை உறுதி செய்யக்கூடிய இன்றைய அரசியல் சூழல் மட்டுமின்றி எதிர்கால அரசியல் சவால்களையும் கருத்தில் கொண்டே ம.இ.கா தமது இலக்கை நிர்ணயிக்கும் என அதன் தேசியத் தலைவர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அவ்வகையில் தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தின் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்திய சமூக பிரச்சனைகளக் களையவும், பள்ளி சீரமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கவும் உத்ரவாதம் கொடுத்துள்ளதை நிறைவேற்ற ம.இ.கா வாய்ப்பு வழங்கும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, சுயநலப் போக்கின்றி இந்திய சமூக மேம்பாட்டுக்காக பாடுபடும் ம.இ.கா, கிளை, தொகுதி அளவிலும் சீரமைப்பு நடவடிக்கைகளை எடுக்க விருப்பதாக, விக்னேஸ்வரன் கூறினார்.
மஇகா பொதுத் தேர்தலின் போது, 10 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. அத்தொகுதிகளில் ம.இ.கா வேட்பாளர்கள் 60 விழுக்காடு வரை இந்தியர்களின் வாக்குகளைப் பெற்றிருந்தனர். போட்டியிடாத இடங்களில் மஇகா-வின் பிரதிநிதித்துவம் இல்லையென்றாலும், நாடு முழுவதும் கட்சியின் தொகுதி- கிளைகளின் வாயிலாக , மக்களுக்கு இறங்கி மஇகா சமூக சேவையாற்றுமென அவர் குறிப்பிட்டார்.
அதையடுத்து தொகுதிகளும் , கிளைகளும் துடிப்புடன் செயல்படுவதோடு அங்குள்ள சுற்றுவட்டார மக்கள் மத்தியில் நன்கு அறிமுகத்தைப் பெற்றிருக்க, அவற்றை வழிநடத்தும் தலைவர்கள் திறமையானவர்களாக இருப்பது உறுதி செய்யப்படுமென விக்னேஸ்வரன் கூறினார்.
இவ்வேளையில், இன்று பிரதமர் தலைமையில் நடைபெறும் ஒற்றுமை அரசாங்கத்தின் செயலவை கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கும் மஇகா, அடுத்த மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடுமென விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.