
தம்பின், மார்ச் 6 – இறந்து விட்டதாக கூறப்பட்ட தங்களது மகனின் உடலை தகனம் செய்யவிருந்த குடும்பத்தினருக்கு, தங்களது மகன் உயிரோடு தான் உள்ளார் என்று வந்த அழைப்பினால் அதிர்ச்சிக் குள்ளாகினர்.
இறுதி நேரத்தில், சுங்கை பூலோ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 19 வயதான தங்களது மகன் உயிரோடு இருப்பதாக , சிறைச்சாலை துறையினரிடமிருந்து அழைப்பு வந்து திடுக்கிட்டதாக தம்பின், Taman Desa Permai – யைச் சேர்ந்த 45 வயது சந்திரன் தெரிவித்தார்.
அவர்கள் தகனம் செய்யவிருந்த உடல் , மகனுடன் ஒரே சிறையின் அறையில் தடுத்து வைக்கப்பட்டவர் என தெரிய வந்ததாக அவர் கூறினார்.
பிப்ரவரி 28-ஆம் தேதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட தங்களது மகன் சுயநினைவிழந்து இறந்து விட்டதாக, மார்ச் 3-ஆம் தேதி அழைப்பு வந்ததாக அவர் கூறினார்.
பின்னர், Sungai Buloh மருத்துவமனையில் இருந்து உடலைக் கோரியபோது, தலை மொட்டையடிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்கான தழும்பும் தையலும் இருந்ததாகக் குறிப்பிட்டார்.
தங்களது மகனை போன்று அந்த உடல் இல்லாததைக் கண்டு தொடக்கத்தில் சந்தேகம் அடைந்தாலும், சவப் பரிசோதனையால் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என கருதி, உடலை மீட்டுக் கொண்டதாக சந்திரன் கூறினார்.
இவ்வேளையில் , அவர்கள் தகனம் செய்யவிருந்த உடலை சிறைச்சாலை துறையினர் மீட்டுக் கொண்டு விட்டதாகவும், சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் நம்பப்படுகிறது.