
கோலாலம்பூர், மார்ச் 30 – தங்களது மகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி , ஒரு குடும்பத்தினர் , பொது மக்களிடமிருந்து நன்கொடையாக பணத்தைப் பெற்று மோசடி செய்திருக்கும் சம்பவம் அம்பலத்துக்கு வந்திருக்கிறது.
இந்தியாவில் மேற்படிப்புக்காக சென்றிருந்த தங்களது 33 வயது மகள் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு , திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
அவரது சிகிச்சைக்காக 4 லட்சம் ரிங்கிட் வரை பணம் தேவைப்படுவதாக கூறி 2014 -ஆம் ஆண்டு முதல் அவர்கள் பொதுமக்களை ஏமாற்றியுள்ளனர்.
அந்த பெண்ணின் தாயும், சகோதரரும் என கூறிக் கொண்ட இருவர் , VIP -முக்கிய பிரமுகர்கள், அரசாங்க சார்பற்ற அமைப்புகள் , அரசியல்வாதிகள் உட்பட சில உள்ளூர் ஊடகங்களையும் நாடி நன்கொடையைத் திரட்டியிருக்கின்றனர்.
அவ்வாறு அவர்கள் சில லட்சங்கள் வரை பணத்தை திரட்டியிருக்கின்றனர்.
இதே மோசடி நோக்கத்தில், உள்ளூர் டிக் டாக் பிரபலம் ஒருவரை இவர்கள் அண்மையில் நாடியபோது, அவர்களின் ஏமாற்றுச் செயல் வெளிச்சத்துக்கு வந்தது.
அவர்கள் கொடுத்திருந்த மருத்துவ அறிக்கையில் , மருத்துவமனையின் பொய்யான தொலைப்பேசி எண் குறிப்பிட்டிருந்ததை அடுத்து, தொடர்ந்து விசாரித்ததில் அந்த பெண்ணின் பெயரில் யாரும் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சைப் பெறாதது கண்டுபிடிக்கப்பட்டது.
அதையடுத்து, அந்த குடும்பத்தினர் மீது போலீஸ் புகார் செய்திருப்பதாக அந்த டிக் டாக் பிரபலம் கூறியுள்ளார்.