
கொழும்பு , மே 19 – இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியினால் மக்கள் போராட்டம் வெடித்ததால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவும் அதிபராக இருந்த கோத்பாய ராஜபச்சேவும் அடுத்தடுத்து பதவி விலகினர். ஆட்சியிலிருந்த ராஜபக்சே குடும்பத்தினரும் ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகினர். அதனைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே அதிபராக பதவியேற்றார். பிரதமராக தினேஸ் குணவர்த்தனே உள்ளார். இந்த நிலையில் திடீரென இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் புறநகர் பகுதியில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் மக்கள் மத்தியில் பரபரப்பானது . எனினும் இந்த தகவலை ஆளும் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.