
திருவணந்தபுரம், மார்ச் 29 – கேரளா, கொல்லம் மாவட்டத்தில் , ஆண்கள் மங்கையர் போன்று தங்களை அழகுப் படுத்திக் கொண்டு பங்கேற்கும் விநோதமான சமய நிகழ்ச்சி ஒன்று ஆண்டுதோறும் மிக கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.
அவ்வகையில் இவ்வாண்டு , கொட்டம்குளக்கரா ஸ்ரீ தேவி கோவிலில் நடைபெற்ற சமய விளக்கு எனும் அந்த திருவிழாவில் பங்கேற்ற ஆண்களின் புகைப்படங்கள் வெளியாகி, பலரது புருவத்தை உயர்த்தி ஆச்சரியப்பட வைத்திருக்கின்றது .
ஏனெனில் அத்திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் ஆண்களா இல்லை பெண்களா என அடையாளப் படுத்த முடியாத வகையில் , அனைவரும் அத்துனை அழகான தோற்றத்தில் மங்கையர்களாகவே மாறி ஜொலித்தனர்.
முன்னொரு காலத்தில் இந்த கோவில் அமைந்துள்ள பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்கு சென்ற சிறுவர்கள் ஒரு கல்லில் தேங்காய் உடைத்தபோது அதிலிருந்து குருதி வழிந்ததாகவும் இதனால் பயந்து போன அவர்கள் ஊர் பெரியவர்களிடம் தெரிவித்ததாகவும் நம்பப்படுகிறது. அதனையடுத்து சோதிடர் ஒருவரிடம் பரிகாரம் கேட்க, அவர் அந்த கல்லில் இருப்பது வனதுர்கா என்று கூறி கோவில் எழுப்பி வழிபட அறிவுறுத்தி உள்ளார்.
அன்று அங்கு எழுப்பப்பட்ட கோவிலில் தான் இன்று இந்த விசித்திர வழிபாடு நடைபெற்று வருகிறது.
ஆரம்பத்தில் பெண்கள் மட்டுமே வழிபட்டு வந்த நிலையில் கோவிலுக்குள் நுழைய ஆண்கள் பெண்வேடமிட்டு சென்றதால், காலப்போக்கில் அந்த வழக்கமே நிலைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதுவும், தற்போது , இந்த திருவிழாவில் ஒவ்வோராண்டும் அதிகமான ஆண்கள் , மெனக்கெட்டு தங்களது அழகை மெருக்கூட்டிக் கொண்டு உற்சாகத்துடன் பங்கேற்று வருவதைக் காண முடிகிறது.