காஜாங், ஆகஸ்ட் 5 – திருடப்பட்டதாக எண்ணி, மசூதியின் சடல வண்டியைத் துரத்திச் செல்லும் மோட்டார் சைக்கிள் குழு ஒன்றின் 23 வினாடி காணொளி, ஒரு தவறான புரிதல் என்று போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.
மசூதியின் சடல வண்டியை ஓட்டிச் சென்ற 35 வயது ஆடவர், இச்சம்பவம் குறித்துக் கடந்த ஞாயிற்றுக்கிழமை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அந்த ஓட்டிநர், வண்டியைப் பழுதுபார்ப்பதற்காக மெக்கானிக்கை தேடி, அக்கம்பக்கத்தில் அந்த வேனை மெதுவாக ஒட்டி வந்ததாகவும், அதே வேளையில் தவறான முகவரிக்குச் சென்றதாகவும் கூறியிருக்கிறார்.
அப்போதுதான், அதனைத் தவறாகப் புரிந்து கொண்ட சில ஆடவர்கள், வண்டியைத் தடுத்து நிறுத்தி, அதைத் திருடியதாகவும், வீடு உடைப்புச் சம்பவங்களில் ஈடுபட்டதாகவும், அவர் மீது அபாண்டமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதோடு நிறுத்திக் கொள்ளாமல், வாகனத்தைக் கட்டைகள் மற்றும் உலோக கம்பிகளைக் கொண்டு மோட்டர் சைக்கிள்களில் துரத்தி அடித்ததையும், காஜாங் மாவட்ட போலீஸ் தலைமை உதவி கமிஷனர் நஸ்ரோன் அப்துல் யூசோப் (Naazron Abdul Yusof) தெரிவித்தார்.
வைரலான அந்த காணொளியையும் ஆய்வு செய்த போலீஸ், விசாரணையில் அந்த ஓட்டிநர் மீது குற்றப் பதிவுகள் இல்லாததையும் உறுதி செய்திருக்கின்றனர்.
இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், தவறான அல்லது போலியாகச் செய்திகளைப் பரப்ப முயற்சிக்கும் நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் எச்சரித்திருக்கிறனர்.