ஈப்போ, மே-5, தமது தலைமையிலான மடானி ஒற்றுமை அரசாங்கம் அனைத்து இனங்களுக்குமானது என பிரதமர் மறு உறுதிப்படுத்தியுள்ளார்.
பெரும்பான்மையினர் – சிறுபான்மையினர் என்ற பேதமின்றி நாட்டிலுள்ள அனைத்து இன மக்களையும் சமமாக நடத்துவதே மடானி அரசின் தாரக மந்திரம் என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
எனவே, மலேசியாவை பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைக் கொண்ட ஒரு சிறந்த நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளில் ஒற்றுமை அரசாங்கம் ஒருபோதும் சமரசம் செய்துக் கொள்ளாது என பிரதமர் திட்டவட்டமாகச் சொன்னார்.
“ஏழ்மை என வரும் போது, நான் தோல் நிறத்தைப் பார்ப்பதில்லை. அதோடு, எதிர்கட்சி ஆளும் மாநில மக்களாக இருந்தாலும் அவர்களையும் மத்திய அரசாங்கம் ஒதுக்காது” என்றார் அவர்.
என்னதான் மலாய்க்காரர்கள் பெரும்பான்மையினராக இருந்தாலும், இஸ்லாம் கூட்டரசின் அதிகாரப்பூர்வ மதமாக இருந்தாலும், மலாய் தேசிய மொழியாக இருந்தாலும், ஒவ்வொரு மலேசியரின் உரிமைகளையும் பாதுகாக்க மக்கள் ஒன்றுபட வேண்டும் என டத்தோ ஸ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.
மேலும் அனைத்து மத நம்பிக்கைகளையும் மதங்களையும் நாம் மதிக்க வேண்டும்; மதிக்கிறோம் என பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.
பேராக், இந்திரா மூலியா அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான வைசாக்கி சீக்கியப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் பங்கேற்று பேசிய போது டத்தோ ஸ்ரீ அன்வார் அவ்வாறு கூறினார்.
பேராக்கில் உள்ள சீக்கியச் சமூக மக்களின் நலன்களுக்காக தாம் 2 லட்சம் ரிங்கிட் நிதியை ஒதுக்கியிருப்பதாகவும் அவர் சொன்னார்.