கோலாலம்பூர், ஆகஸ்ட்-29 – மடானி புதிய வீடமைப்புத் திட்டங்களின் கட்டுமானங்களுக்கான நிபந்தனைகள், வசதிப்படும் வாழ்க்கை, பசுமையான வாழ்விடம், பொழுதுப் போக்கு இடங்கள், வசதி உள்கட்டமைப்புகள் ஆகியவற்றை உட்படுத்தியிருக்க வேண்டும்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனைத் தெரிவித்துள்ளார்.
வசதி உள்கட்டமைப்பு என்பது, மடானி உணவங்காடி நிலையங்களையும் உட்படுத்தியதென அவர் சொன்னார்.
குறைந்த அல்லது நடுத்தர வருமானம் பெறும் தரப்பினருக்கான மடானி வீடுகள், போதிய வசதிகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.
பெரிய அளவில் இல்லையென்றாலும், சிறிய அளவிலாவது விளையாட்டுப் பூங்காக்கள், கால்பந்து மைதானம் போன்றவை அக்குடியிருப்புகளில் அமைக்கப்பட வேண்டும்.
பசுமையான இடங்களோடு, சிறிய சமூக மண்டம், சூராவ் மற்றும் வழிபாட்டு இடங்கள் உள்ளிட்டவையும் இருக்க வேண்டுமென, நில மேம்பாட்டாளர்களுக்கு நிபந்தனையாக விதிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் சொன்னார்.
கோலாலம்பூர், தாமான் டேசாவில், மடானி சூர்யா குடியிருப்பின் (Residensi Suria Madani) அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற போது டத்தோ ஸ்ரீ அன்வார் அவ்வாறு கூறினார்.
0.99 ஹெக்டர் நிலப்பரப்பில் Mah Sing குழுமத்தால் மேம்படுத்தப்படவிருக்கும் இந்த மடானி சூர்யா அடுக்குமாடி குடியிருப்பு, இரு கட்டடத் தொகுதிகளாக மொத்தம் 800 வீடுகளைக் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு வீடும் தலா 800 சதுர அடியில், 2 லட்சம் ரிங்கிட் விலையில் விற்கப்படவிருக்கின்றது.