
கோலாலம்பூர், மார்ச்-19 – மதங்கள் இழிவுப்படுத்தப்படும் சம்பவங்களில் நடவடிக்கை எடுப்பதில் அதிகாரத் தரப்பு இரட்டை நிலைப்பாட்டைக் கடைபிடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவ்விஷயத்தில் முஸ்லீம்கள் ஒரு மாதிரியும் முஸ்லீம் அல்லாதோர் ஒரு மாதிரியும் நடத்தப்படுவதாக, உலகளாவிய மனித உரிமைகள் கூட்டமைப்பான GHRF குற்றம் சாட்டியது.
ஆகமம் அணி மலேசியா ஆதரவுடன் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் GHRF சார்பில் ஷஷி குமார் அவ்வாறு சொன்னார்.
சில இஸ்லாமிய மத போதகர்களின் அச்சுறுத்தல்களும் அதிகரித்து வருகின்றன.
அவற்றுக்கெதிராக எண்ணற்ற போலீஸ் புகார்கள் செய்யப்பட்டு, போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டும் ஆண்டுக்கணக்கில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
சம்பந்தப்பட்ட மத போதகர்களும் தத்தம் செயல்களுக்கு எந்த விளைவுகளையும் எதிர்கொள்ளாமல், தொடர்ந்து வெறுப்புணர்வைத் தூண்டி மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கின்றனர்.
இதில் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், இதுபோன்ற சம்பவங்களில் தேசிய சட்டத் துறை தலைவர் அலுவலகம் மீண்டும் மீண்டும் “மேல் நடவடிக்கை இல்லை” (No Further Action) என கை விரித்து விடுகிறது.
இது நீதித்துறை அமைப்பிற்குள் உள்ள ஒருதலைபட்சமான போக்கை அப்பட்டமாகக் காட்டுகிறது.
இஸ்லாத்தை அவமதித்ததாக முஸ்லீம் அல்லாதவர்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படுவதும், முஸ்லீம் அல்லாதவர்களுக்கு எதிரான இதே போன்ற குற்றங்கள் தண்டிக்கப்படாமல் போவது ஏன் என்றும் ஷஷி குமார் கேள்வி எழுப்பினார்.
அனைத்து மலேசியர்களுக்கும் நீதி மற்றும் சமத்துவத்தை உறுதிச் செய்யாமல் மடானி அரசாங்கத்தின் கீழ் அதிகாரிகளின் மௌனம் ஏன் தொடர்கிறது என்றும் அவர் கேட்டார்.
அதே செய்தியாளர் சந்திப்பில் பேசிய வழக்கறிஞர் அருண் துரைசாமி, இது தொடர்கதையானால், சாலை மறியலில் ஈடுபடுவதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்றார்.
ஆனால் அது கடைசி நடவடிக்கையாக இருக்குமென அவர் சொன்னார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அரசு சாரா அமைப்புகள், சிவில் சமூகத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அக்கறையுள்ள பொது மக்கள் கலந்துகொண்டனர்.