கோலாலம்பூர், ஜனவரி-9, மதுபானங்களைப் பரிமாறும் இரவு விருந்துகள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கு, பள்ளி மண்டபத்தை இனியும் வாடகைக்கு விடக்கூடாது என சில சீனப்பள்ளிகளுக்கு உத்தரவுப் பறந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
சீன நாளேடுகள் இச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளன.
பஹாங், தெலமோங் சீனப் பள்ளியில் தான் இப்பிரச்னை முதலில் வெடித்தது.
ஆண்டு விழாவுக்காக அப்பள்ளி மண்டபத்தை வாடக்கைக்குக் கேட்ட போது, மதுபான நிகழ்வுகளுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டதாக ஸ்ரீ தெலமோங் விளையாட்டு மற்றும் சமூக நடவடிக்கை கிளப் முன்னதாக தெரிவித்திருந்தது.
எனினும், கல்வி அமைச்சு அப்படியோர் உத்தரவைப் பிறப்பிக்கவில்லை என, துணையமைச்சர் வோங் கோ வோ (Wong Kah Woh) ஜனவரி 6-ம் தேதி தெளிவுப்படுத்தியிருந்தார்.
மாணவர்கள் சம்பந்தப்படவில்லை என்றால், மதுபானங்களைப் பரிமாறும் தனியார் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை என்றார் அவர்.
ஆனால் அவர் விளக்கம் கொடுத்த மறுநாளே, மதுபான நிகழ்வுகளுக்கு பள்ளி மண்டத்தில் அனுமதியில்லை என கிளந்தானில் உள்ள சீன ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளுக்கு உத்தரவு பறந்துள்ளது.
இதனால், சீனப் புத்தாண்டை முன்னிட்டு விருந்து நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்துள்ள பல்வேறு உள்ளூர் அமைப்புகள் பாதிக்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இவ்விவகாரம் தொடர்பில் MCA-வும் Gerakan-னும் முன்னதாக ஒற்றுமை அரசாங்கத்தையும் DAP-யையும் கடுமையாக விமர்சனம் செய்தன.
DAP ஆட்சியிலிருந்தும் சீனப்பள்ளிகளுக்கு ‘துரோகம்’ இழைக்கப்படுவதாக அவை குற்றம் சாட்டின.
மதுபான நிறுவனங்கள் சீனப் பள்ளிகளின் நன்கொடை திரட்டல் நிகழ்வுகளுக்கு ஆதரவளிக்கும் விவகாரம் சில மாதங்களுக்கு முன்னர் சர்ச்சையாகி ஓய்ந்த நிலையில், இப்புதிய சர்ச்சை எழுந்துள்ளது.