
கோலாலம்பூர், ஜன 9 – சட்டவிரோதமான மற்றும் மலிவான விலையில் விற்கப்படும் மதுபானங்கள் தொடர்பான இப்போதைய பிரச்சனைகளுக்கு காரணமே தவிர, நள்ளிரவுக்குப் பிறகும் மற்றும் 24 மணி நேரம் மதுபானங்களை விற்கும் கடைகள் அல்ல என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரான எம் .குலசேகரன் தெரிவித்தார். அனைத்து 24 மணி நேர கடைகளிலும் இரவு 10 மணிக்கு மேல் மதுபானங்கள் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என துணைப்பிரதமர் Ahmad Zahid Hamidi – யின் சிறப்பு அதிகாரி ரமேஸ் ராவ் கூறியிருந்த ஆலோசனை ஏற்புடையதாக இல்லையென குலசேகரன் சுட்டிக்காட்டினார். சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் மற்றும் மலிவு விலையில் விற்கப்படும் மதுபானங்கள் விற்பனைக்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும் என குலசேகரன் கேட்டுக்கொண்டார்.
ஊராட்சி மன்றங்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் வகையில் மதுபானங்கள் விற்கும் கடைகளில் ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது மற்றும் ஆக்கப்பூர்வமான கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என அவர் ஆலோசனை தெரிவித்தார். அதோடு மதுபானத்திற்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு சிகிச்சை வழங்க வேண்டியதும் அவசியம் என்றும் நமது மருத்துவமனைகளில் இதற்கான சிறப்பு பிரிவுகள் இருப்பதையும் அவர் வலியுறுத்தினார்.