Latestமலேசியா

மது போதையில் வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக ஜோகூர் போக்குவரத்து போலீஸ் நடவடிக்கை

ஜோகூர் பாரு, ஜூன் 17 – மது போதையில் வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக ஜோகூர் குற்றவியல் மற்றும் போக்குவரத்து போலீசார் ஜோகூரிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தீவிர சோதனை நடவடிக்கையை நேற்றும் இன்றும் மேற்கொண்டனர். மது போதையில் வாகனம் ஒட்டிய மூன்று பெண்கள் உட்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 18 முதல் 60 வயதுடைய உள்நாட்டைச் சேர்ந்த 37 ஆடவர்களும் வெளிநாட்டைச் சேர்ந்த மூவரும் அடங்குவர் என ஜோகூர் போலீஸ் தலைவர் கமிஷனர் குமார் முத்துவேலு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். அனுமதிக்கப்பட்ட மதுபானத்தை விட அதிக அளவில் மது அருந்தியதன் தொடர்பில் 1987 ஆம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டத்தின் 45 ஆவது விதி உட்பிரிவு ( 1)இன் கீழ் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 37 தனிப்பட்ட நபர்களும் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 10, 000 ரிங்கிட்டிற்கும் குறையாமல் 30,000 ரிங்கிட் மேற்போகாமல் மற்றும் 2 ஆண்டு சிறை மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டும் உரிமம் ரத்துச் செய்யப்படலாம்.

இந்த நடவடிக்கையின்போது 1,204 தனிப்பட்ட நபர்களுடன் 1,056 வாகனங்களும் சோதனையிடப்பட்டன. பல்வேறு குற்றங்களுக்காக 532 சம்மன்கள் விநியோகிக்கப்பட்டன. இதர பல்வேறு குற்றங்களுக்காக மேலும் 257 சம்மன்களும் வழங்கப்பட்டன. இந்த நடவடிக்கையின்போது 1987ஆம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டியதற்காக 41 வயதுடைய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவருடன் தாய்லாந்தைச் சேர்ந்த இரு பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் மேல் நடவடிக்கைக்காக ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைமையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர். மது போதையில் வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக ஜோகூர் போலீஸ் தொடர்ந்து கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்றும் கமிஷனர் குமார் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!