வாஷிங்டன், ஏப்ரல் 29 – ஓக்லஹோமா மற்றும் அருகிலுள்ள கிரேட் ப்ளைன்ஸ் மாநிலத்தின் சில பகுதிகளை டஜன் கணக்கான சூறாவளி தாக்கியதில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை நெப்ராஸ்கா மற்றும் அயோவாவை 78 சூறாவளிகள் தாக்கியதை அடுத்து, வடக்கு டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமாவிலிருந்து மிசோரி வரை 35 சூறாவளிகள் பதிவுச் செய்யப்பட்டதாக, அமெரிக்க தேசிய வானிலை சேவை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதனால், நேற்று வரை அப்பகுதிகளிலுள்ள பல இடங்களில் 18 செண்டிமீட்டர் அளவுக்கு அடை மழை பெய்த வேளை ; திடீர் வெள்ளம், நிலச்சரிவு, சூறாவளி எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
அந்த பேரிடரில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக ஓக்லஹோமா திகழ்கிறது. அங்கு இயற்கை சீற்றத்தில், இதுவரை நால்வர் உயிரிழந்தனர். சூறாவளி சுழன்று அடிக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
அங்கு, மோசமாக பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களுக்கு உதவியை விரைவுபடுத்த 30 நாள் அவசரகாலமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துகளில் சிக்கி காயமடைந்த அல்லது காணாமல் போனவர்களை தேடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இவ்வேளையில், நேற்று பிற்பகல் நிலவரப்படி, டெக்சாஸிலுள்ள, 25 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளிலும், ஓக்லஹோமாவிலுள்ள, 19 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளிலும் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது.