லண்டன், ஆகஸ்ட் -13 – மத்திய லண்டன் நகரான லெஸ்தரில் (Leicester) 11 வயது சிறுமியும் அவளது 34 வயது தாயும் கத்திக் குத்துக்கு ஆளாகினர்.
சிறுமி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற வேளை, தாய்க்கு சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன.
இதையடுத்து தாக்குதல் நடத்திய 32 வயது ஆடவனை சம்பவ இடத்தில் வைத்தே போலீஸ் கைதுச் செய்தது.
சந்தேக நபருக்கும், தாக்கப்பட்ட தாய்–மகள் இருவருக்கும் முன்பின் அறிமுகம் இல்லையென்பது மட்டும் தற்போதைக்குக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாக்குதலுக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரிக்கப்படுகிறது; எனினும் அதுவொரு பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என்பது உறுதியாகியுள்ளதாக லண்டன் போலீஸ் கூறியது.
பிரிட்டனின் வடமேற்கு நகரான சௌத்போர்ட்டில் (Southport) 3 சிறுமிகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்த 2 வாரங்களுக்குப் பிறகு இப்புதியச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அத்தாக்குதலை நடத்தியர் அடைக்கலம் பெற்ற முஸ்லீம் என இணையத்தில் வதந்தி பரவி, இங்கிலாந்து முழுவதும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது