
ஹூஸ்டன், நவம்பர் 7- 2020-ஆம் ஆண்டு, அமெரிக்கா, புளோரிடா மாநிலத்தில், தாதியாக பணிப்புரிந்த மனைவியை, அவர் பணிப்புரிந்த மருத்துவமனை கார் நிறுத்துமிடத்தில், 17 முறை கத்தியால் குத்தி, கொடூரமான முறையில் கொலை செய்த, இந்திய நாட்டு ஆடவன் ஒருவனுக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிலிப் மேத்யூ (Philip Mathew) எனும் அந்த ஆடவன், தமக்கு எதிரான குற்றச்சாட்டை மறுக்கவில்லை என்பதோடு, மேல் முறையீடு செய்யப்போவதில்லை என தெரிவித்ததால், அவன் மரண தண்டனையிலிருந்து தப்பியதாக கூறப்படுகிறது.
குடும்ப வன்செயல்களில் இருந்து தப்பிக்க முயன்ற 26 வயது மெரின் ஜோய் (Merin Joy) எனும் தனது மனைவியின் காரை, மருத்துவமனை கார்நிறுத்துமிடத்தில் வழிமறித்து, அவரை 17 முறை கத்தியால் குத்தி கொன்ற மேத்யூ, கீழே இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த அவரது உடல் மீது காரை ஏற்றி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
2020-ஆம் ஆண்டு, ப்ரோவர்ட் ஹெல்த் கோரல் ஸ்பிரிங்ஸ் (Broward Health Coral Springs) மருத்துவமனையில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
அச்சம்பவத்தை நேரில் கண்ட, ஜோயின் சக நண்பர்கள், அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். எனினும், இறப்பதற்கு முன் “எனது பிள்ளையை காப்பாற்றுங்கள்” என மட்டும் கூறி ஜோய் கதறி அழுததாக கூறப்படுகிறது.