ஹைதராபாத், ஆகஸ்ட் 14 – ஹைதராபாத்தில், சமூக ஊடகத்தில் அதிக பார்வையாளர்களைப் பெறும் ஆசையில், ‘மயில் கறி செய்வது எப்படி?”, என சமையல், காணொளி வெளியிட்ட யுடியூபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
யுடியூப் சமூக ஊடகத்தில் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை பெறும் காணொளிக்களுக்கு அதிக வருவாய் கிடைப்பதால், பரபரப்புக்காக காணொளி போடும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், தெலுங்கானாவை சேர்ந்த யுடியூபர் ஒருவர் தற்போது சிக்கலில் சிக்கியுள்ளார்.
இவர் சமீபத்தில் வெளியிட்ட காணொளி ஒன்றில், மயில் கறி சமைப்பது எப்படி என, விபரமாகச் செயல்முறை விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்த தகவல் அறிந்த போலீசார், கொடாம் பிரனை குமார் (Kodam Pranay Kumar) எனும் அந்த ஆடவனை கைது செய்தனர்.
வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய தேசிய பறவையான மயில், பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதை வேட்டையாடுவது, உண்பது வனத்துறை பாதுகாப்பு சட்டத்தின்படி கடும் குற்றமாகக் கருதப்படுகிறது.