
கெடா, சுங்கை பட்டாணியிலுள்ள, உணவகம் ஒன்றின் முன்புறம் இருந்த நாற்காலியில், ஆடவர் ஒருவர் இறந்து கிடக்க காணப்பட்டார்.
நேற்றிரவு மணி 11.20 வாக்கில், சுயநினைவு இன்றி நாற்காலியில் சாய்ந்திருந்த அந்த ஆடவரை கண்டு பொதுமக்கள் ஆம்புலன்சுக்கு அவசர அழைப்பு விடுத்தனர்.
எனினும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அந்த ஆடவர் இறந்து விட்டது உறுதிப்படுத்தப்பட்டதோடு, அவருக்கு ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பக்கவாதம் ஆகிய நோய்கள் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்ததாக, குவாலா மூடா போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் ஜைடி செ ஹசான் தெரிவித்தார்.
இரவு மணி 11 வரை தந்தை வீடு திரும்பாததால், அவரது கைபேசிக்கு அழைத்த அந்த ஆடவரின் மகன், பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், அதிர்ச்சியோடு சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் கூறப்படுகிறது.
அதனை ஒரு திடீர் மரண சம்பவமாக போலீஸ் வகைப்படுத்தியுள்ளது.