கோலாலம்பூர், மே 8 – தலைநகர், ஜாலான் ராஜா சூலான் மோனோ இரயில் நிலையத்திற்கு அருகில், மரம் வேரோடு பெயர்ந்து விழுந்த இடத்தில், துப்புரவு பணிகளும், தண்டவாளத்தை பழுது பார்க்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, அச்சம்பவத்தில் பழுதடைந்திருக்கும் மோனோ இரயில் தண்டவாளத்தை பழுது பார்க்கும் பணிகள் முழு வீச்சாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நேற்று மாலை தொடங்கி தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஜாலான் சுல்தான் இஸ்மாயில் சாலை, மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் மணி இரண்டு வாக்கில் பெய்த அடை மழையில் வேரோடு பெயர்ந்து விழுந்த, 50 ஆண்டுகள் பழைமையான மரம் முற்றாக அகற்றப்பட்டு விட்ட போதிலும், சம்பவ இடத்தில் துப்புரவு பணிகள் தொடர்கின்றன.
அச்சம்பவத்தால், கே எல் சென்ரல் தொடங்கி மேடான் துவான்கு வரையிலான மோனோ இரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.