
பெய்ஜிங், மார்ச்-25- சீனாவில் மருத்துவர் தவறான பல்லைப் பிடுங்கியதில் நீண்ட நாட்களாக வலியால் அவதிப்பட்டு வந்த பெண், இறந்து கிடக்கக் கண்டெடுக்கப்பட்டார்.
வூ எனும் 34 வயது அப்பெண், மார்ச் 12-ஆம் தேதி நகராட்சி மருத்துவமனையில் தனது கடைவாய்ப்பல்லை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.
ஆனால், மருத்துவர் தவறுதலாக ஆரோக்கியமான பல்லைப் பிடுங்கி விட்டார்.
பின்னர் தவற்றை உணர்ந்து அதை வலுக்கட்டாயமாக மீண்டும் செருகி, வலி நிவாரணி மருந்துகள் எதுவும் இல்லாமல், மற்ற பற்களுடன் சேர்த்து கம்பியால் அதை கட்டியிருக்கின்றார்.
இதனால் பல் சொத்தையாகி, முகம் வீங்கி, சாப்பிட கூட முடியாமல், பல நாட்களுக்கு தண்ணீரை மட்டுமே அவர் குடித்து வந்தார்.
தாங்க முடியாத வலியால் வூ பல நாட்கள் தூக்கத்தை இழந்துத் தவித்தார்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து தனக்கு நேர்ந்ததைப் பற்றி அவர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்; ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மருத்துவரின் தவற்றை மறைக்க, தனது மருத்துவப் பதிவுகள் மாற்றப்பட்டதாகக் கூறி, வூ சமூக ஊடகங்களில் அழும் வீடியோவையும் பதிவேற்றிப் பார்த்தார்.அப்போதும் ஒன்றும் நடக்கவில்லை.
இந்நிலையில், மார்ச் 17-ஆம் தேதி ஆலோசனைக்காக வூ மருத்துவமனைக்குத் திரும்பினார்; ஆனால் பின்னர் மருத்துவமனையின் 11-ஆவது மாடியில் இருந்து அவர் விழுந்து இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
வூ மரணத்தில் எந்தக் குற்றவியல் அம்சங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என போலீஸார் கை விரித்து விட்டனர்.
அதே நேரத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட 61,266 ரிங்கிட் இழப்பீட்டை அவரது குடும்பத்தினர் நிராகரித்தனர்.
விஷயம் பெரியதானதும், இப்போது சம்பந்தப்பட்ட மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவத்தை சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து போலீஸாரும் விசாரித்து வருவதாகவும் மருத்துவமனை உறுதிப்படுத்தியது.
சீன சமூக ஊடகங்களில் இச்சம்பவம் வைரலாகி 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது; மருத்துவமனையின் அலட்சியத்திற்கு கண்டனங்களும் குவிந்து வருகின்றன