
கோலாலம்பூர், ஏப் 5 – புதிய மருத்துவ மற்றும் மருந்தக அதிகாரிகளை வேலைக்கு அமர்த்த, சுகாதார அமைச்சுக்கு 300 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை வழங்கியுள்ள அரசாங்கத்தின் முடிவை வரவேற்பதாக, செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் தெரிவித்துள்ளார்.
அதன் வாயிலாக, சுமார் ஆயிரத்து 500 நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான அதிகாரிகளை பணியமர்த்த முடியும்.
சுகாதார பணியாளர்களின் நலனை பேணும் அரசாங்கத்தின் கடப்பாட்டை அது காட்டுவதாக சிவராஜ் கூறியிருக்கின்றார்.
அதே சமயம், மருத்துவ பணியாளர்களுக்கான Oncall தொகையை, 50 விழுக்காடாக உயர்த்தும் சுகாதார அமைச்சின் விண்ணப்பத்தையும் அரசாங்கம் பரிசீலிக்க வேண்டுமென சிவராஜ் குறிப்பிட்டார்.
நாட்டின் நிதி ஆற்றலை பொருத்தே அதனை தீர்மானிக்க முடியும் என்றாலும், பல்வேறு சவால்களையும், பணிச் சுமையையும் எதிர்நோக்கியுள்ள சுகாதார பணியாளர்களின் நலன் பேண ஏதுவாக, சுகாதார அமைச்சு முன் வைத்திருக்கும் அந்த கோரிக்கை மிகவும் நியாயமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.