மறுநிர்மாணிப்புக்காக காசாவை அமெரிக்கா கையகப்படுத்தும்; டிரம்பின் அதிரடித் திட்டம்

வாஷிங்டன், பிப்ரவரி-5 – காசா தீபகற்பத்தை அமெரிக்கா ‘கையகப்படுத்தும்’ அசாதாரணப் பரிந்துரையொன்றை அதிபர் டோனல்ட் டிரம்ப் முன் வைத்துள்ளார்.
காசாவில் வெடிக்காத வெடிகுண்டுகளைக் கையாள்வது, சீரழிந்த கட்டடங்களை அப்புறப்படுத்தி நிலத்தை சம தரையாக்குவது, குடியேற்றங்களை ஏற்படுத்தி பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பது, மக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவது என, மறுநிர்மாணிப்பை அமெரிக்கா மேற்கொள்ளும்.
ஆனால், டிரம்பின் அந்த மறுநிர்மாணிப்பை அனுபவிப்பவர்கள் யார் என்பது தான் இப்போது கேள்வியாக உள்ளது.
காரணம், காலங்காலமாக அங்கு குடியிருக்கும் பாலஸ்தீனர்கள் காசாவிலிருந்து வெளியேறி எகிப்து, ஜோர்டான் போன்ற மேற்காசிய நாடுகளில் குடியேற வேண்டுமென்ற தனது வற்புறுத்தலை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
பாலஸ்தீனர்களை வெளியேற்றி விட்டு, வெளியிலிருந்து வரும் ‘புதியவர்களைக்’ குடியேற்றுவது தான் அவரின் திட்டமெனக் கூறப்படுகிறது.
டிரம்பின் அந்த ஆலோசனையை பாலஸ்தீன மக்களுக்கும் அவ்விரு நாடுகளும் முற்றிலுமாக நிராகரித்துள்ள போதிலும் அவர் விடுவதாக இல்லை.
நெருங்கியப் பங்காளியான இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவை வாஷிங்டனில் வரவேற்றப் பிறகு, டிரம்ப் அப்பரிந்துரையை அறிவித்தார்.
ஹமாஸ் தரப்புடனான போர் நிறுத்த உடன்பாடு தொடர்பான முக்கியப் பேச்சுவார்த்தைக்காக, நெத்தன்யாஹூ வெள்ளை மாளிகை வந்துள்ளார்.
டிரம்ப் மீண்டும் அதிபரானப் பிறகு இருவரும் சந்திப்பது இதுவே முதன் முறையாகும்.