Latest

மறைந்தும் மறையாது நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்திருக்கும் துன் சாமிவேலு

கோலாலம்பூர், மார்ட் 8 – மறைந்தும் மறையாது பலரது நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்திருக்கும் துன் சாமிவேலுவின் 87 -வது பிறந்த நாள் இன்றாகும்.
இன்றைய நாளில் அவருடனான நினைவலைகளை மஇகாவின் தேசியத் தலைவர் டான் ஶ்ரீ எஸ். ஏ.விக்னேஸ்வரன் பகிர்ந்து கொண்டார்.

கட்சியின் தேசியத் தலைவராக தாம் இன்று பொறுப்பேற்றிருப்பதற்கு முழுமுதற் காரணம் துன் சாமிவேலு.
அத்துடன் எத்தனையோ போராட்டங்களுக்கிடையிலும் வலிமையுடனும், மக்கள் ஆதரவுடனும் கட்சி திகழ்வதற்கு அடித்தளம் அமைத்துத் தந்தவரும் அவரே என விக்னஸ்வரன் குறிப்பிட்டார்.

இந்திய சமுதாயம் யாரையும் அண்டி நிற்காமல் சொந்தக் காலில் நின்று பல்கலைக்கழக உயர் கல்வி பெறவும், நிதிச் சிக்கலால் இந்திய மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்கவும் , துன் சாமிவேலு அமைத்த எம்ஐஇடி, ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகம் ஆகியவைதான் இன்று முக்கிய நிதி ஆதாரங்களாகத் திகழ்வதையும் விக்னேஸ்வரன் சுட்டிக் காட்டினார்.
அதே வேளை, தமது மனதில் உதித்த எண்ணங்களைக் கொண்டு துன் சாமிவேலுக்காக கவிதை ஒன்றையும் , விக்னேஸ்வரன் புனைந்திருக்கின்றார்.

கண் இமையாய் வாழ்கிறாய்

எந்தையிலும் சிந்தனையிலும்
என்னில் கலந்த
ஏற்றமிகு தலைவரே
ஏழிசை நாதமே…!

அறியாத வயதில்
அரசியல் அரிச்சுவட்டை
அள்ளித் தந்த வள்ளலாய்
அட்சயப் பாத்திரம் நீங்கள்

கொள்கை வடிவாய்
கோலோச்சும் உங்கள் புகழில்
கோடிட்ட இடத்தை நிரப்பும்
கோடித் தொண்டனில் நான் ஒருவன்

நீங்கள் நடந்து வந்த கம்பீரம்
நீடித்து நின்ற நாட்கள்
நிலையாய் நின்றது
நின்றது போல் நிலைத்தன

தந்தையாய்– தலைவராய்
தலைமையேற்ற தமையனாய்
தன்னிகரில்லாத தமிழ்த் தலைவராய்
தலைநிமிர்ந்தாய் – தலைகொடுத்தாய்

சரித்திரத்தின் நாயகனாய்
சான்றாப் புகழாய் நின்று
சரிநிகர் தமிழர் சாட்சியாய்
சமுதாய வேர்கொண்டாய்

கல்விக்கோர் கருணையாய்
காலமெல்லாம் கண்விழித்து
கலங்கரை விளக்கமாம் – ஏய்ம்ஸ்ட்
கலாசாலையாய் அமைத்தாய்

வீட்டுக்கொரு பட்டதாரியை
வீதியெல்லாம் புகழ்பரப்ப
விதியை மாற்றப் புறப்பட்டாய்
விதைத்தாய் புதிய வரலாற்றை

பூகம்பமாய் வந்தாலும் –உன்
புன்னகையால் – சமூகம்
பூரிப்பானது புதுயுகம் கண்டது
புவியெல்லாம் மணம் வீசியது

இருந்தாலும் இறந்தாலும்
இதயம் முழுவதும் நிரம்பினாய்
இன்று பிறந்த நாளிலும்–கண்
இமையாய் இருக்கிறாய் தலைவா!– என தமது கவிதையில் இந்திய சமுதாயத்துக்காக துன் சாமிவேலு முன்னெடுத்த போராட்டங்களை விக்னேஸ்வரன் பகிர்ந்து கொண்டார்.

இதனிடயே, இன்று மாலை மணி ஐந்துக்கு, தலைநகர் மஇகா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் துன் சாமிவேலுவுடனான நினைவலைகள் எனும் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!